மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளில் நாளை (13-11-24) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், பா.ஜ.க மீது அதிருப்தியடைந்த யோகேஷ்வர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சென்னபட்டனா தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னபட்டனா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் யோகேஷ்வரை ஆதரித்து கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜமீர் அகமது கான் பிரச்சாரம் செய்யும் போது, மத்திய அமைச்சர் ஹெச்.டி குமாரசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய ஜமீர் அகமது கான், “பா.ஜ.கவை விட ‘காலியா’ குமாரசாமி ஆபத்தானவர். எங்கள் கட்சியில் காங்கிரஸ் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிபி யோகேஷ்வர் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு பாஜகவில் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேரத் தயாராக இல்லை. ஏனென்றால், ‘காலியா’ குமாரசாமி மிகவும் ஆபத்தானவர். இப்போது யோகேஷ்வர் தனது சொந்த கட்சிக்கே வந்துவிட்டார்” என்று பேசினார். காலியா என்பதற்கு கருப்பு என்று சொல்லப்படுகிறது.
மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘காலியா’ குமாரசாமி என்று அமைச்சர் பேசியதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜ.க கடும் விமர்சனம் செய்தது. கர்நாடக அமைச்சரின் இனவெறி இழிவுக்காக கர்நாடக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. தான் கூறிய இந்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜமீர் அகமது கான், “குமாரசாமியும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குமாரசாமியை காலியா என்று அழைப்பது இது முதல் முறையல்ல. அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே நாங்கள் ஒருவரையொருவர் பாசத்தால் பெயர் சொல்லி அழைப்போம். அவர் என்னை குட்டை என்று அழைப்பார், நான் அவரை கருப்பு என்று அழைப்பேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது, அவர் என்னை குட்டையானவர் என்று கிண்டல் செய்வார், நான் அவரை கருப்பு என்று கிண்டல் செய்தேன். எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.