நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற தாமாக முன்வந்து விசாரித்து வருவதற்கு தடை விதிக்க கோரி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிட்டிருந்தார். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் நேற்று முன்தினம் தனது அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் இந்த வழக்கு மீண்டும் ரித்திகேஷ் சாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உரிய ஒப்புதல் இல்லாமலேயே தனி நீதிபதி விசாரித்து வருகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல’ வாதிட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கை தனி நீதிபதியாக உள்ள ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது’ என வாதிட்டார்.
இந்நிலையில் இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, இந்த வழக்குகளை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது. தலைமை நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கலாம் அல்லது வேறு நீதிபதி முன்பு விசாரிக்க பட்டியலிடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.