உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநிலத்தில் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் மூன்றுநாள் பயணமாக உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று உத்தரப்பிரதேச தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சுஷில் சந்திரா கூறியுள்ளதாவது; அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களை சந்தித்து, கரோனா விதிமுறைகளை பின்பற்றி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேச தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5, 2022 அன்று வெளியிடப்படும்.
வாக்குச் சாவடிக்கு வர முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, தேர்தல் ஆணையம் வாக்குகளை பெறும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வி-விபேட்கள் பொருத்தப்படும். தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் செய்யப்படும்.
2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின. 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 59% வாக்குகள் பதிவாகியிருந்தன. மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலத்தில் ஏன் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம். சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்படவுள்ள பணியாளர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.