Skip to main content

மணிப்பூர் வீடியோ விவகாரம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Manipur Video Affair; Supreme Court warns central government

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார். இருப்பினும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து  இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய நபர் ஹேராதாஸ் என்பவரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Manipur Video Affair; Supreme Court warns central government

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தருவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம்  இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத்தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்