கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை, சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னும் ஏற்காத நிலையில், எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ரினைசேன்ஸ் என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சிவக்குமார் ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அந்த 10 எம்.எல்.ஏ.க்களும் மும்பை காவல்துறையைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, சொகுசு விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக, கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தார். இன்று காலை அந்த விடுதிக்குச் சென்ற டி.கே.சிவக்குமாரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அங்கிருந்து செல்ல மறுத்த சிவக்குமார், விடுதிக்குள் செல்வதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அங்கேயே நாற்காலிகளை போட்டு அவர் அமர்ந்தார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய் ஆகியோரும் சிவக்குமாருடன் இணைந்தனர். சுமார் 6 மணி நேரம் வரை விடுதி முன் தர்ணா செய்து வந்த சிவக்குமாரையும் உடன் இருந்த தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விடுதி முன்பு 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள், கலினா பல்கலைக்கழக ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக விலை பேசுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், சித்தராமையா ஆகியோர் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கர்நாடக அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் சபாநாயகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.
அதே போல் எம்.எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுப்பு தெரிவித்து வருவதால், கர்நாடகாவில் அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக ஆளுநர் விரைவில், இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கர்நாடக பாஜக கட்சி அதிக பெரும்பான்மையுடன் இருக்கும், நிலையில், கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.