தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராகத் தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கிய அமுதா, அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றினார். மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உள்படத் தமிழக அரசின் பல துறைகளில் முக்கியப் பொறுப்புகளையும் அமுதா வகித்துள்ளார். இதனையடுத்து 2015-இல் சென்னை பெரு வெள்ளத்தின்போது, வெள்ள பாதிப்புகளைச் சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா, சிறப்பாக பணியாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அதன் பின்னர் உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ். அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் அமுதா, தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.