மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், அரசை விமர்சித்துப் பேசியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் பட்டுள்ளார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலமான மணிப்பூரின் இம்பாலைச் சேர்ந்தவர் கிஷோர்சந்திரா வாங்கேம். இவர் ஐ.எஸ்.டி.வி. நெட்வொர்க் சேனலின் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி ஜான்சிராணியின் பிறந்ததின விழாவில் முதல்வர் பிரென் சிங் மணிப்பூரின் விடுதலை இயக்கத்தையும், ஜான்சிராணியையும் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.
ஜான்சிராணிக்கும் மணிப்பூர் விடுதலை இயக்கத்திற்கும் எந்தவிதம் தொடர்புமில்லை என்று கொந்தளித்த கிஷோர்சந்திரா, முதல்வர் பிரென் சிங்கின் பேச்சைக் கண்டித்ததோடு, “அவர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் கைப்பாவை” என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, கிஷோர்சந்திராவை மணிப்பூர் காவல்துறை நவ.21ஆம் தேதி கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அங்கு லோக்கல் மாஜிஸ்திரேட் பெயில் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 24 மணிநேரத்தில் மஃப்டியில் வந்த காவல்துறையினர் கிஷோர்சந்திராவை எஸ்.பி. அழைத்துவரச் சொன்னதாகக்கூறி கூட்டிச்சென்றுள்ளனர். அடுத்த ஐந்தாறு நாட்களுக்கு அவரைப்பற்றி எந்தத் தகவலும் கூறாமல், நவ.29 அன்று வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கிஷோர்சந்திராவை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த கிஷோர் சந்திரா பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் வெளியிட்ட வீடியோ பணி நிமித்தமானதல்ல என்பதை, மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனைக் குழு, இந்த விவகாரத்தில் கிஷோர் சந்திராவை சிறை தண்டனை விதிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது கிஷோர் சந்திராவிற்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிஷோர்சந்திராவின் மனைவி ரஞ்சிதா பேசுகையில், “என் கணவர் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. முதல்வரை நோக்கி கேள்வியெழுப்பவும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கவும் உரிமை தந்துள்ள ஜனநாயக மண்ணில் தன் கருத்தைப் பதிவுசெய்தது தவறாகாது” எனக் கூறியிருந்தார். தற்போது மத்திய அரசிடம் முறையிட்டும் அவரது குரலுக்கு யாரும் செவிமடுக்கவில்லை.
யாராக இருந்தாலும் குற்றங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது பத்திரிகையாளர்களின் பணி. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டதற்காக, நமது நக்கீரன் ஆசிரியர் மீது தேசவிரோத வழக்குப்போட்டு கைதுசெய்தது காவல்துறை. அதில் சட்டப்போராட்டம் நடத்தி கைது நடவடிக்கையை முறியடித்ததோடு, தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவர போராடி வருகிறது நக்கீரன்.
அரசைக் கேள்வியெழுப்பினாலோ, குற்றம்சாட்டினாலோ, விமர்சித்தாலோ தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. பத்திரிகையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்கவிட்டு தேசத்தில் எதைப் பாதுகாக்கப் போகிறார்களோ?