அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாகவே தான் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்' என அவருடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரத்தை ராகுல் காந்தி மாற்றி இருந்தார். மேலும் மக்களவைச் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்து அங்கிருந்து வெளியேறிய ராகுல் காந்தி அவருடைய தாயார் சோனியா காந்தி வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது டெல்லி டு துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவின் சாவியை அரசிடம் ராகுல் காந்தி ஒப்படைத்துள்ளார். 'உண்மையை பேசியதற்கான பரிசு இது; உண்மையை பேசியதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்' என இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.