
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் 150 க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விபரங்களை மணிப்பூர் மாநில போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். வன்முறை சம்பவத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க மணிப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக 9 ஆயிரத்து 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.