இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் சென்று துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. நியாயமான விசாரணையை உறுதி செய்யவே வழக்குகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க முற்பட்டால் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 164 இன் கீழ் வாக்கு மூலங்களை உள்ளூர் நீதிபதி முன்பு பெற வேண்டும். இதற்காக கௌகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனியாக அதிகாரிகளை நியமனம் செய்துகொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது காணொளியில் ஆஜராகலாம் என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்துள்ளார்.