மணிப்பூரில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது. பதிவான வாக்குகள் வரும் மார்ச் 10- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (05/03/2022) காலை தொடங்கிய நிலையில், மாலை நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அம்மாநில முன்னாள் முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மணிப்பூரில் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. பா.ஜ.க.வின் பிரமுகர் எல் அமுபா சிங் இம்பாலில் உள்ள காங்கிரஸ் தொண்டரின் வீட்டிற்கு சென்று வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சுட்டதில், பா.ஜ.க. தொண்டர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை ஏற்பட்டது.
அதேபோல், இம்பால் அருகே உள்ள லாம்பில் என்ற பகுதியில் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிபிஜாய் என்பவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.