தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாகப் பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு ஓமிக்ரான்' எனப் பெயரிட்டுள்ளது.
இந்த 'ஓமிக்ரான்' கரோனாவை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீன நாட்டு பயணிகளுக்கும், அதேபோல் மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாட்டு பயணிகளுக்கும் இந்தியா கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து மஹாராஷ்ட்ராவிற்கு கடந்த 24ஆம் தேதி திரும்பிய நபருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ஓமிக்ரான் வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய, அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தற்போது தனிமையில் உள்ள நபர், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதில் இருந்து அவர் யாரையும் சந்திக்கவில்லை என மஹாராஷ்ட்ரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.