சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, கேரளாவில் பல ஐயப்ப பக்தர்கள் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து போராட்டங்கள் பேரணிகள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில்கூட தேவசம் போர்டு அமைச்சர் வீட்டு வாசலை பாஜக இளைஞரணி முற்றுகையிட முயன்றனர். அதேபோல ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி நடத்தினர். நேற்று நடந்த ஒரு போரட்டத்தில் கொள்ளம் துளசி என்னும் நடிகர், சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும் என்று கோபமாக பேசினார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகம் முன்பு இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்தள மன்னர் குடும்ப நிர்வாக குழு தலைவர் சசிகுமார வர்மா தலைமை வகித்தார். இதில் பந்தள மன்னர் கேரள வர்ம ராஜா, மன்னர் குடும்பத்தை சேர்ந்த தீபா வர்மா, சுரேஷ் கோபி எம்பி, சிவகுமார் எம்எல்ஏ., பாஜக என்ஆர்ஐ பிரிவு ஷில்பா நாயர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய சசிகுமார் பேசுகையில், “ உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 10க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மீது தீர்ப்பு வந்த பிறகே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலை ஆகம விதிகளை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற முடியாது. கேரள அரசும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.