Skip to main content

இஸ்ரேலில் இருந்து 2வது விமானம்; டெல்லி வந்த தமிழர்கள்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

2nd flight from Israel arrives in Delhi!

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. 

 

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன. இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாலும், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதாலும் ஜெருசலேம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.

 

அந்த வகையில் மத்திய அரசு இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை மீட்க, ‘ஆபரேஷன் அஜய்’ என்ற பெயரில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக நேற்று இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் டெல்லி வந்தது. இந்தியா வந்த 212 பேரில் தமிழகத்தை சேர்ந்த 21 பேரும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். 

 

இந்த நிலையில் இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்தது. இதில் 25 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்தடைந்த 235 பேருக்கும் அந்ததந்த மாநில அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.  இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்துக்கொண்டு மேலும் இரு சிறப்பு விமானங்கள் இன்று இரவு அல்லது நாளை காலை தாயகம் வரலாம் எனத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்