Published on 28/11/2020 | Edited on 28/11/2020
'நிவர்' புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டது. புயல் சேதங்களைப் பார்வையிட மத்திய குழு, வரும் திங்கள் கிழமை தமிழகம் வரவுள்ள நிலையில், புதுவையிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புயல் சேதத்திற்கு ரூபாய் 100 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'நிவர்' புயலால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். எனவே 'நிவர்' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு, இடைக்கால நிவாரணமாக, 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.