அரசு அதிகாரியின் கார் முன்பகுதியில் தொங்கியபடியே வாலிபர் ஒருவர் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ராம்நகர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தில் கழிவறை கட்டுவதற்கான நிதியின் இரண்டாவது தவணையை அரசு அதிகாரிகள் நிறுத்தி வைத்ததால், பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். இதுகுறித்து, தொகுதி மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து முறையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள், அவரது அலுவலகத்தின் முன்பாக காத்திருந்தனர். ஆனால், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் கவுதம், நீண்டநேரமாக வெயிலில் காத்திருந்த பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும் இதனைப் பொருட்படுத்தாத அதிகாரி, தனது காரை இயக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரீட்ஜ் பால் என்பவர் வேகமாக கிளம்பிய காரின் முன் தாவிக்குதித்து மறித்துள்ளார். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதில், கார் முன்னால் தொற்றிக்கொண்டு பீரீட்ஜ் பால் கிட்டத்தட்ட 4 கிமீ தூரத்திற்கு பயணம் செய்தார். அவ்வப்போது அவர் தன் செல்போனிலும் பேசிக்கொள்கிறார். பிறகு சோதனைச்சாவடி வரவும் பாதிவழியில் இறங்கிக்கொண்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி மற்றும் வாலிபர் ஆகிய இருவரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.