Skip to main content

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

Published on 18/01/2025 | Edited on 18/01/2025
Sensational verdict in Kolkata woman doctor case

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் சம்பவம் நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதே சமயத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ, சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் மருத்துவமனை முதல்வராக இருந்த போது சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கை நடத்திய காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டலையும் சி.பி.ஐ கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூடிய நீதிமன்ற அறைக்குள் 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. பெண் மருத்துவர் கொலை வழக்கில் தான் சிக்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தெரிவித்தான். குற்றத்திற்கான தண்டனை வரும் திங்கட்கிழமை 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 ஆம் தேதியும் நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் பேச வாய்ப்பு தரப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்