ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அப்போது பேசிய சந்திரபாபு, “மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த இன்று நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஆனால், நேற்று பிரதமர் ஆந்திராவின் குண்டூருக்கு வந்திருந்தார். அதற்கு என்ன தேவை இருக்கிறது. நீங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதை எப்படி நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இது ஆந்திர மக்களின் சுய மரியாதை. எங்களுடைய சுய மரியாதையை தாக்கினால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மத்திய அரசை எச்சரிக்கிறோம், குறிப்பாக பிரதமர் தனிப்பிட்ட ஒருவர் மீது தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
மேலும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பரூக் அப்துல்லா ஆகிய அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நாளை டெல்லி வந்து சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.