மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அவர் பேசும் போது, "மேற்கு வங்கத்திற்கு பிரதமர் ஒரு பைசா நிதியாவது கொடுத்தாரா? தனது சாதனைகளை பற்றி மார்தட்டிக்கொள்ளும் அவர், மேற்கு வங்களத்திற்கு அவர் என்ன செய்தார் என யோசித்து பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாக்களில் அவர் பிஸியாக இருந்தார். ஆனால் இப்போது அவர் இங்கு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், கூட்டு குடும்பங்களாக வாழும் மக்களே அதிகம். ஆனால் அவர் (பிரதமர் மோடி) எப்படி தெரியும்? அவருக்கென்று சொந்த குடும்பத்தாரும் இல்லை, அதுபோல அவர் இந்நாட்டு மக்களை தனது குடும்பத்தாராகவும் நினைப்பதில்லை" என கூறினார்.