நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலுர்காட் தொகுதிக்காக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், “ பாஜக சொல்வதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கே வரப்போவதில்லை. தென்னிந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவில் எந்த இடங்களையும் அவர்கள் வெல்லவே மாட்டார்கள். நாட்டில் 100 இடங்களைக்கூட பெற முடியாத நிலைதான் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாதி இடங்களாவது வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்தது. 2014ல் அவர்கள் இரண்டு இடங்களே வெற்றிபெற்றனர். வரும் தேர்தலில் அதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு ரசகுல்லாதான் தான் கிடைக்கும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்கத்தில் ஒரு இனிப்புப் பண்டமாக ரசகுல்லா உள்ளது. அதேநேரம் யாராவது பரீட்சையில் பூஜ்யம் எடுக்கும்போதும் கிண்டலடிக்க ரசகுல்லாவை குறிப்பிடுவது வழக்கம்.