Skip to main content

"இரு கரங்களையும் கூப்பி கேட்கிறேன் - தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்த மம்தா!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

mamata banerjee

 

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், ஐந்து கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையிலும், அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு குறையவில்லை. 

 

அதேநேரத்தில் மேற்கு வங்கம் உட்பட இந்தியா முழுவதும், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் தாங்கள் நடத்த இருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் கைவிட்டது. ராகுல் காந்தி, தனது மேற்கு வங்க பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்தார். தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்யமாட்டார் என திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்தது. மேலும், கொல்கத்தாவில் பிரச்சாரத்திற்கான இறுதிநாளில் அடையாள கூட்டம் மட்டும் நடைபெறும் எனவும், மம்தாவின் எல்லா பொதுக்கூட்டத்தின் நேரமும் 30 நிமிடங்களாக சுருக்கப்படுவதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்தது.

 

இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் உத்தர் தினாஜ்பூரின் சகுலியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய மம்தா, மீதமுள்ள மூன்றுகட்ட தேர்தல்களையும் ஒன்றாக நடத்துமாறும், மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர், “இரு கரங்களையும் கூப்பி, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கிறேன். (மீதமுள்ள) மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரேநாளில் அல்லது இரண்டு நாட்களில் நடத்துங்கள். மேற்கு வங்க மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்