மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்கள் தொடர்பான மனுக்களை ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்விற்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் தொடர்புடையவை என்பதால், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு வழக்குகளை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை அன்று விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிவசேனா கட்சி யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.