உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம்10 ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் என ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த ஐந்து மாநில தேர்வு முடிவுகளும் ஜூலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்களால் யூகிக்கப்படுகிறது. இந்தநிலையில் 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது.