Skip to main content

ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை நிறைவேற்றிய மஹாராஷ்ட்ரா!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

uddhav thackeray

 

இந்திய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களுக்கு, அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பார்கள். மேலும் ஆளுநர்களே துணை வேந்தர்களை நியமிப்பார்கள். அதேசமயம் துணை வேந்தரை நியமிப்பதற்கான நடைமுறை மாநிலங்களுக்கு மாநிலம் சிறிய அளவில் மாறுபடுகிறது.

 

மஹாராஷ்ட்ராவை பொறுத்தவரை, துணை வேந்தர் பதவிக்காக துணை வேந்தர் தேடல் குழு ஐந்து நபர்களை அம்மாநில ஆளுநக்கு பரிந்துரைக்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிப்பார். மேலும் அரசு அமைக்கும் தேடல் குழுவில் ஒரு நபரை ஆளுநர் நியமிக்கலாம். இந்தநிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்து ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் விதமாக மஹாராஷ்ட்ரா அரசு புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

 

மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்கள் சட்டம், 2016-ஐ திருத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவின்படி, இனி துணை வேந்தர் தேடல் குழு, ஐந்து பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து இரண்டு பெயர்களை மஹாராஷ்ட்ரா அரசு ஆளுநருக்கு அனுப்பும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் 30 நாட்களுக்குள் துணை வேந்தராக நியமிக்க வேண்டும்.

 

மேலும் இந்த புதிய மசோதா, மஹாராஷ்ட்ர பல்கலைக்கழங்களில் இணைவேந்தர் என்ற பதவியை உருவாக்க வழிவகை செய்கிறது. அந்த இணைவேந்தர் பதவியை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் வகிப்பார் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதோடு, ஆளுநர் இல்லாதபோது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இணைவேந்தர் தலைமை தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத்தவிர பல்கலைக்கழங்களின் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் இணைவேந்தர் கேட்கலாம் என்றும், இணைவேந்தர் கேட்கும் தகவல்களை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்