மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முன்வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குழப்பம் நீடித்து வருகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதர கட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே தலைமையிலான தலைவர்கள், அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, "ஆட்சி அமைக்க விரும்புவதாகவும், அதனால் ஆட்சி அமைக்க 48 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டோம். ஆனால் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார் என்று கூறினார். இருப்பினும் ஆளுநர் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. எனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார்."
இந்நிலையில் ஆட்சியமைக்க முன்வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப்மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் அழைப்பு கடிதம் தந்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.
ஆளுநரின் முடிவால் சிவசேனா அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் ஆட்சி அமைக்க முயன்று வரும் சிவசேனாவுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.