ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்துள்ளார் என பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். ராகுலுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை உள்ளதாக புகார் கூறினார்.
இதனையடுத்து இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மோடியின் கட்டுக்கதை என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜீவாலா தெரிவித்தார்.
மேலும் தோல்வி பயத்திலேயே பாஜக இவ்வாறு செய்கிறது என சஞ்சய் ஜா கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாராளுமன்ற உறுப்பினர் எந்த ஒரு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினாலும் அவர்களின் கேள்விகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு பெரிய விஷயமல்ல. இது சாதாரணமாக இருக்கும் நடைமுறை தான்" என கூறியுள்ளார்.