இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் வரும் 15ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கரோனாவல் பெற்றோர்கள், காப்பாளர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் குடும்பத்திற்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என தெரிவித்துள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் செய்ய விரும்பினால், அரசு உத்தரவாதத்தின் கீழ் வங்கிக்கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.