தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து மான் கி பாத் உரையின்போது குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, மான் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (30/08/2020) 68-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "பண்டிகை காலம் களைகட்ட தொடங்கியுள்ளதால் மக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அதிக எச்சரிக்கையுடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, அரபு நாடுகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்கள் இந்தாண்டு அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை கணினிமயமாக்குவது சிறப்பாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டு முறைகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும். செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்துத் தொடர்பான விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. ஊட்டச்சத்து தொடர்பாக போட்டிகள் நடத்தப்படவுள்ளதால் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. கரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலானப் பணிகளை சிறபபாக மேற்கொள்கின்றனர். கரோனா காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். வெளியில் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவை. இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும். தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும்.". இவ்வாறு பிரதமர் கூறினார்.