இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும்,கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை முக்கிய அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் தடையின்றி கொண்டுசெல்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில நாட்களாகவே கரோனா இரண்டாம் அலை காரணமாக மாநில முதல்வர்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை நிர்வாகத்தினர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், நாளை மீண்டும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.