முதல் பயணத்திலேயே பயணிகளை கடுப்பாக்கிய லக்னோ மெட்ரோ!
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில், முதன்முதலாக கிளம்பிய மெட்ரோ ரயில் பாதிவழியில் நின்றதால், வெளியே வரமுடியாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல்வர் யோகி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் இந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இன்று தொடங்கிய மெட்ரோ ரயில் சேவையில், முதல் பயணத்தை கொண்டாடுவதற்காக ரயிலில் பயணித்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லக்னோவில் இருந்து கிளம்பிய மெட்ரோ ரயில் மாவையா பகுதியில் பழுதாகி நின்றது. இதனால், மின்விளக்குகள், குளிர்சாதன வசதி என எதுவுமில்லாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியில் வரமுடியாமல் சிக்கித் தவித்துள்ளனர்.
தாமதமாக வந்த லக்னோ மெட்ரோ ரயில் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரயிலின் பின்பக்கமுள்ள அவசர வழியைத் திறந்து பயணிகளை மீட்டுள்ளனர். பாதிவழியில் இறக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தியுடன் கிளம்பிச் சென்றுள்ளனர்.