உலகின் பல இடங்களில் உள்ள தொழிலாளர்களை அதிக நேரத்திற்கு வேலை செய்ய வைத்த கொடூரம் இருந்தது. பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் விளைவாக தினமும் 8 மணி நேரம் உழைப்பு என்ற உரிமை தொழிலாளர்களுக்கு கிடைத்தது. இந்தியாவை பொருத்தவரை, சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின் விளைவாக தினமும் 8 மணி நேரம் என்ற உரிமை கிடைத்தது. அதன்படி, இன்றளவு பல நாடுகளில் தினமும் 8 மணி நேரம் வேலை மற்றும் 1 நாள் விடுமுறை என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், லார்சன் & டூப்ரோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லை என்று வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நாட்டின் வலுவான பணி நெறிமுறையால் சீனா அமெரிக்காவை மிஞ்சும். அதுதான் உங்களுக்கான பதில். நீங்கள் உலகின் மேல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார். சில தினங்களுக்கு முன்பு, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்திருந்த நிலையில், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.