ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான் தலைமையிலான அரசை அங்கீகரித்துள்ளன. கனடா, தலிபான்களை ஆப்கன் அரசாக அங்கீகரிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தலிபான் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா பல முதலீடுகள் செய்திருப்பதாலும், இந்தியாவிற்குத் தலிபான்களின் அச்சுறுத்தல் இருந்துவருவதாலும் இந்திய அரசு தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்துமா என கேள்வியெழுந்துள்ளது.
இந்தநிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தலிபான்களுடன் இந்தியா தொடர்பில் இருக்கிறதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "தற்போது காபூலில் நடைபெற்றுவரும் நகர்வுகளைக் கவனித்துவருகிறோம். தலிபான் பிரதிநிதிகள் காபூலுக்கு வந்துள்ள நிலையில், நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானுடனான உறவு தொடருமா என்ற கேள்விக்கு, "ஆப்கன் மக்களுடனான வரலாற்று உறவு தொடரும். இது வெறும் ஆரம்ப காலம் மட்டுமே. தற்போதைக்கு எங்களது கவனம், ஆப்கனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மீதுதான் உள்ளது" என கூறியுள்ளார்.