நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, “ உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடிய விரைவில், 3வது இடத்தை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில், உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களின் ஆரோக்கியமான உணவுப் பட்டியலின் தரவுகள் திரட்டப்பட்டு உலக வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 3 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவலுடன் ரஷ்யா முதல் இடத்தில் இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் 83 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவலுடன் கடைசி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், இந்தியாவில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலையும் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை சராசரியாக 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், தனிமனித ஊதியம் மட்டும் 28 முதல் 35 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.