2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு, ஒரே நாடு ஒரே மின்சாரம், ஸ்வட்ச் பாரத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. அதன் படி, 2019-2020 ஆம் ஆண்டுக்கான கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்துக்கான நிதி ரூபாய் 750 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த தொகையை விட இரு மடங்கு குறைவு எனக் கூறப்படுகிறது. கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூபாய் 2250 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டில் ரூபாய் 750 கோடியை மட்டுமே அரசாங்கம் செலவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த கங்கை நதியை தூய்மை செய்யும் திட்டத்தின் கீழ் உள்ள 100 திட்டங்களில் 10 கழிவுநீர் உள்கட்டமைப்பு திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூய்மை கங்கா திட்டத்தின் பெரும்பான்மை பகுதி மாசுப்பட்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் பாதைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை குறைத்துள்ளதால், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.