நேற்று மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது சமாஜ்வாதி கட்சி எம்.பி அசாம் கான், துணை சபாநாயகர் ரமாதேவியிடம் ஆபாசமாக பேசியது பலத்த எதிர்ப்பை பெற்றது.
துணை சபாநாயகராக ரமாதேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது முத்தலாக் மசோதாவுக்கு எதிராக அசாம் கான் பேசினார். அவர் பேசும்போது அங்கிருந்த உறுப்பினர்கள் கூச்சலிட்டதால், இதுகுறித்து ரமாதேவியிடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ரமாதேவி, கூச்சலிடுபவர்களை கண்டுகொள்ளாமல், தன்னை பார்த்து பேசும்படி கூறினார். அதற்கு அசாம் கான் கூறிய பதில் அவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் உடனடியாக அவரது கருத்தை திரும்ப பெறவேண்டும் என ரமாதேவி வலியுறுத்தினார். ஆனால், அசாம் கான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்மிருதி இரானி மக்களவையில் இன்று இதுகுறித்து பேசினார். மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் அசாம் கானுக்கு ஒருமித்த எதிர்ப்பை காட்ட வேண்டும் என கூறினார்.
இதையடுத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அசாம் கானுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் துணை சபாநாயகர் ரமாதேவிக்கு ஆதரவாக இருக்கும் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். இதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி க்களும் அசாம் கானுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அசாம் கான் மீது எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.