இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, ஊரடங்கை இறுதி வாய்ப்பாகத்தான் பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்த நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த டெல்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்கள், அந்த இறுதி ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளன. அம்மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை (08.05.2021) முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இந்தநிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலம், வரும் 10ஆம் தேதி காலை ஐந்து மணிமுதல் 24ஆம் தேதிவரை இரண்டுவார முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தொழிற்சாலைகளில் பணிபுரிய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் சென்றுவர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்திலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 15ஆம் தேதிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் அதிக நாட்கள் எல்லாவற்றையும் மூடி வைக்க முடியாது என தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கரோனா உறுதியாகும் சதவீதம் 18 ஆக இருக்கையில் எல்லாவற்றையும் திறந்தும் வைத்திருக்க முடியாது என கூறியுள்ளார்.