
ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள சூழலில், அடுத்த ஒன்பது மாதங்களில் இந்தியாவில் இரண்டு கோடி குழந்தைகள் பிறகு என ஐநா சபை கணித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் விளைவாக அடுத்த ஒன்பது மாதத்தில் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என ஐநா சபை கணித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்கள் முடங்கியுள்ளதால் உலகின் பல பகுதிகளில் கருத்தடை சாதனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, இதனால் 70 லட்சம் எதிர்பாராக் கருத்தரிப்புகள் உருவாக்கலாம் எனக் கடந்த மாதம் ஐநா அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய ஐநாவின் கணிப்புப்படி அடுத்த ஒன்பது மாதத்தில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் எனவும், இதில் இந்தியா மற்றும் சீனாவில் அதிகபட்ச குழைந்தை பிறப்பு இருக்கும் எனவும் ஐநா கணித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தைகளும், சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும் பிறக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், நைஜீரியாவில் 64 லட்சம், பாகிஸ்தானில் 50 லட்சம், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் இந்த காலகட்டத்தில் பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மூட்டு நோய் பவுண்டேஷன் தலைவரும்,பொதுச் சுகாதார நல நிபுணருமான டாக்டர் சுஷில் சர்மா இதுகுறித்து கூறும்போது, “கரோனா காலத்தில் அதிகளவில் குழந்தை பிறக்கும்போது, பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்தச் சூழலில் கர்ப்பத் தடை சாதனங்கள் பெண்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இதனால் குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தும் முறைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே பெண்கள் அதிகளவில் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.