இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரிய மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் தரவரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு ஆளுகை ஒருமித்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களைப் பட்டியலிட்டது.
1303.5 புள்ளிகளுடன் தமிழகம் முதல் இடத்திலும், 1257.2 புள்ளிகளுடன் இமாச்சல் 2 ஆவது இடத்திலும், கேரளா 1252 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 1226 புள்ளிகளுடன் குஜராத் 4 ஆவது இடத்திலும் உள்ளன.
பொருளாதார வளர்ச்சியில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகம் நான்காவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்தில் கடந்த ஆண்டு 5 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 3 ஆவது இடத்திற்கும், சுகாதாரத்தில் 7 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 3 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சிறந்த ஆளுகை பிரிவில் கடந்த ஆண்டு 8 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு வசதியில் கடந்தாண்டு 4 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.