இந்திய அரசியல் நிகழ்வுகளில் மிக அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு ஒன்று நேற்றைய மாநிலங்களவை நிகழ்வில் நடைபெற்றுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். இதில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) குறித்து பிரதமர் மோடி பேசிய வார்த்தை ஒன்று அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமர் மோடி எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார், அப்போது அவர் பேசிய வார்த்தை ஒன்றை அவை குறிப்பிலிருந்து நீக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசிய வார்த்தை ஒன்றையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை 6.20 முதல் 6.30 வரை பிரதமர் மோடி பேசிய ஒரு பகுதியிலிருந்து அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் உரையிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.