அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கேரளா காசர்கோடு சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் - பிரச்சனா தம்பதியினரின் மகள் தேவநந்தா (17) அங்குள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். அவர் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு ஹோட்டலில் சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டதோடு குளிர் பானமும் அருந்தியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தேவநந்தா வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் தேவநந்தா பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் அதே ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 க்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவ, அந்த ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் மற்றும் போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டதோடு ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். மாணவியுடன் ஒன்றாக ஷவர்மா சாப்பிட்ட மாணவிகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் ஷவர்மா விற்பனைக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. தற்போது உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவர் சாப்பிட்ட ஷவர்மாவில் கெட்டுப்போன சிக்கன் இருந்த நிலையில் அதில் பரவியிருந்த ஷிகெல்லா வைரஸ் மாணவியின் உடலில் புகுந்து கடுமையான பதிப்பை ஏற்படுத்தியதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சையில் உள்ள மேலும் மூன்று மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கும் சிக்கன் ஷவர்மா மூலம் ஷிகெல்லா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி ராம்தாஸ் தெரிவித்துள்ளார். சுகாதாரமில்லாத தண்ணீர் மட்டும் கெட்டுப்போன உணவுப் பொருள்களை உற்பத்தியாகும் இந்த ஷிகெல்லா வைரஸ் மனித உயிரைப் பறிக்கும் அளவிற்கு உயிர்க்கொல்லி கிருமி என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் கடைகளுக்கு வெளியே பராமரிப்பில்லாமல் விற்கப்படும் அசைவ உணவு வகைகள் மூலம் இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பரவிய இந்த வைரசால் கோழிகோடு மாவட்டத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்தது. ஆரம்பத்தில் டயேரியா அறிகுறி போல வயிற்றுப்போக்கு வாந்தி போன்றவற்றை உருவாக்கும் இந்த வைரஸ், மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும் ஆபத்தாக மாறும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.