2022- 2023ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (01/02/2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவு குறித்து விரிவாக பார்ப்போம்!
அரசின் வருவாயில் கடன் மூலமான வருவாயே முதலிடம் வகிக்கிறது. மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 35 காசுகள் கடன் மற்றும் அது தொடர்பான வழிகளில் வருகின்றன. ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் 16 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது.
வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியின் மூலம் தலா 15 காசுகள் வருவாய் கிடைக்கிறது. அதேபோல், மத்திய கலால் வரி மூலம் 7 காசுகளும், சுங்க வரி மூலம் 5 காசுகளும் கிடைக்கின்றன. வரி இல்லாத வருவாய் மூலம் 5 காசுகளும், கடன் அல்லாத மூலதன வரவுகள் மூலம் 2 காசுகளும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு ரூபாயும் எந்த அடிப்படையில் செலவழிக்கப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்!
கடன்களுக்கான வட்டியைத் திரும்ப செலுத்துவதற்காக ஒவ்வொரு ரூபாயிலும் 20 காசுகளை அரசு செலவழிக்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்காக 17 காசுகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்ட செலவினங்களுக்கு 15 காசுகள் செலவழிக்கப்படுகின்றன. நிதிக்குழுவிற்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 10 காசுகள் தரப்படுகின்றன.
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மற்ற வகை செலவினங்கள் என்ற முறையில் தலா 9 காசுகள் செலவாகிறது. மானியங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடாக தலா 8 காசுகள் வழங்கப்படுகின்றன. அரசு தனது மொத்த வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும் ஓய்வூதியம் என்ற வகையில் 4 காசுகளை செலவழிக்கிறது.