இந்தியா முழுவதும் இன்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இன்று காலை முதல் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு மத்தியில் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வந்தாலும், பல நகரங்களில் கரோனா அச்சம் காரணமாக விமான பயணத்திற்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 25 விமானங்களுக்கும், மஹாராஷ்ட்ராவில் 50 விமானங்களுக்கும் மட்டுமே அனுமதி என்ற சூழலில், கொல்கத்தா விமானநிலையமும் புயல் பாதிப்பால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமான நிலையங்களில் இருந்தும் விமானங்கள் புறப்படவில்லை. அதேபோல விமானப் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் டெல்லியில் 82 விமானங்கள் உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த ரத்து குறித்த தகவல்கள் பயணிகளுக்குப் பெரும்பாலும் கடைசி நேரத்திலேயே தெரிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.