அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான மைண்ட்-ட்ரீ நிறுவனத்தை இந்திய நிறுவனமான எல் & டி வலுக்கட்டாயமாக வாங்க முயற்சிப்பதாக வர்த்தகத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எல் & டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என். சுப்ரமணியன், “ஆறு வருடங்களுக்கு முன்பே மைண்ட்-ட்ரீ நிறுவனத்தை விற்பனை செய்வது தொடர்பாக எல் & டி நிறுவனத்திடம் அவர்கள் அணுகினார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்களுக்கு அந்த நிறுவனத்தை வாங்குவதற்கான சிந்தனை எதுவும் இல்லை. மேலும், அப்போது சித்தார்த்தா அவரது பங்குகளை விற்கும் முடிவிலும் இல்லை. தற்போது, அவர்தான் எங்களிடம் அவரது பங்குகளை விற்றுள்ளார். அவர் பங்கினை விற்றதனால் மைண்ட்-ட்ரீ நிறுவனமும் அந்நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. அதனால் எல் & டி நிறுவனமும் அந்நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை. நாங்கள் கட்டாயப்படுத்தியும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தை பிடுங்க நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மைண்ட்-ட்ரீ நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை வைத்துள்ள காஃபிடே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா எல் & டி நிறுவனத்திற்கு தனது பங்குகளை விற்றார் அதனையடுத்து, மைண்ட்-ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் எல் & டி தீவிரம் காட்டி வருகிறது.
மைண்ட்-ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்தும் எல் & டி நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றிபெற்றால், தற்போது ஐடி துறை தொழில்களில் விற்பனை அளவில் 8-ம் இடத்தில் உள்ள எல் & டி, 6-ம் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.