
இந்தியா முழுவதும் நடைபெறும் 2023ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளனர். மேலும், இந்த கூட்டணிக்கு ‘இ.ந்.தி.யா.’ என்று பெயரை வைத்து பீகார், பெங்களூர் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டம் நடத்தி தங்களது ஆதரவை பெருக்கி வருகிறார்கள்.
அதே நேரத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இணைந்துள்ளனர். அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தபோது, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அந்த கூட்டணியில் இணைவதை உறுதி செய்தார். இது போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்களது ஆதரவை பெருக்குவதற்காக பல முன்னேற்பாடுகள் செய்தும் கூட்டணியை உறுதி செய்தும் வருகின்றனர்.அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் பா.ஜ.க தங்களது கூட்டணி கட்சியை உறுதி செய்தது மட்டுமல்லாமல் தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு எடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.க வுடன் இணையப் போவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், குமாரசாமியும், ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரான தேவகவுடாவும் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. கூட்டணி குறித்து விவாதிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா செப்டம்பர் 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். ஜனதா தள கட்சிக்கு 4 நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதன் படி மற்ற 24 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும்” என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பா.ஜ.க.வின் ஆதரவை பெற்ற சுயேட்சை கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த ஜனதா தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.