கடந்த 14 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் குமாரசாமிக்கு பாராட்டுவிழா வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டவர், கண்ணில் நீர் கசிய அழுதுகொண்டே பேசினார். அப்போது அவர் பேசியதாவது," “உங் களுடைய அண்ணனோ, தம்பியோ முதல்வராகிவிட்டார் என்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் முதல்வரான பிறகு நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் விஷத்தை உண்டு விட்டு, வலியோடு இருக்கிறேன். கடவுள் இந்த பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார். எத்தனை நாட்கள் நான் பதவியில் இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரோ, அத்தனை நாட்கள் முதல் வராக இருப்பேன். அதுவரை கர்நாடக மக்களுக்கு நல்லது செய்வேன். என் தந்தை தேவ கவுடாவின் நிறைவேறாத ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்று வேன்” என்றார்.
இவ்வாறு அவர் பேசியதை அடுத்து, பாஜக வின் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி," குமாரசாமியின் கண்ணீருக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் . கூட்டணி என்று அவரை துன்புறுத்துகின்றனர்". கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா," குமாரசாமி நல்ல ஒரு நடிகர், அவருக்கு விருது கொடுக்க வேண்டும். அவரது நடிப்பை காட்டி மக்களை முட்டாளாக்குகிறார்" என்றார். கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வர், ‘’முதல்வர் குமாரசாமி கட்டாயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சி யுடன் இருக்க முடியும்” என்றார்.
இந்நிலையில் தற்போது அதைப்பற்றி பேசியுள்ள குமாரசாமி," அன்று நடந்தது எங்களது கட்சியின் கூட்டம் அதனால் நான் உணர்ச்சிவசம் பட்டுவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் குறிப்பிட்டு பேசவில்லை. இதற்கு முன்பு கூட நான் குறிப்பிட்டு பேசியதில்லை. ஆனால், ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்கி விட்டனர். எனது கண்ணீருக்கு காங்கிரஸ் காரணம் இல்லை, எங்கள் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.