Skip to main content

இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதா? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

union health minister

 

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 13 சர்வதேச நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த ஒமிக்ரான் கரோனாவை தங்கள் நாடுகளில் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பல்வேறு நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

 

ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டினர் வர தடை விதித்துள்ளன. இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள சிலருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது எந்தவகையான கரோனா தொற்று என கண்டறிய சோதனை ஆய்வு நடைபெற்றுவருகிறது.

 

இந்தநிலையில், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் மேலும் இரு எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Two more MPs suspended in Parliament

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் பதாகைகளுடன் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாகச் சென்று முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மேலும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த சி. தாமஸ் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (கேரளா) கட்சியைச் சேர்ந்த ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட செய்யப்படுவது இதுவே முதல்முறை எனத்  தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

The central government has called for an all-party meeting 

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4 ஆம் தேதி (04.12.2023) தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி (02.12.2023) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.