பாஜகவின் கரோனா தடுப்பூசி தேர்தல் வாக்குறுதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 28 அன்று முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட தேர்தல் முறையே நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்டார். இதில், பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வந்தவுடன், பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பா.ஜ.க கூறுவது, கரோனாவை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இது தேர்தல் விதிமுறை மீறல் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாக கோகலே என்பவர் ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்த கேள்விக்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், "மாநிலங்களின் தேர்தல் அறிக்கையில் அரசியல் சாசன சட்டத்தை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது. அப்படி எந்தவொரு தேர்தல் விதிமீறலும் இவ்விவகாரத்தில் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.