கேரளாவில் நரபலிக் கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் பாகங்கள் சிலவற்றைப் புதைப்பதற்கு முன்பு சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவரும், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பண்ணாவைச் சேர்ந்த ரோஸிலிலும், பட்டனம்திட்டா மாவட்டத்தில் லாட்டரி விற்கும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரோஸிலி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி முதல் பத்மாவையும் காணவில்லை.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் திருவல்லாவைச் சேர்ந்த பகவல் சிங்- லீலா தம்பதி முகமது ஷபி என்பவரின் உதவியுடன், அந்த பெண்ணை கடத்தி நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதையடுத்து, மூன்று பேரையும், காவல்துறையினர் கைது செய்தனர்.
நரபலிக் கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதைப்பதற்கு முன்பாக, உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகள் மூன்று பேரையும் வரும் அக்டோபர் 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.