குழந்தை தன்னை அம்மா என்று அழைக்கப்போவது மகிழ்ச்சியாக உள்ளது என திருநர் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜியா பாவெல் மற்றும் ஜஹாத் தம்பதி. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நிலையில் தத்து எடுத்துக்கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தது. இதனால் அவர்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
தொடர்ந்து கடந்த சில மாதங்கள் முன் பாவெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஜாஹத்திற்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. திருநங்கைக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
இது குறித்து இணையத்தில் பதிவிட்ட தம்பதி, குழந்தை நலமாக இருப்பதாகவும் குழந்தையின் பாலினத்தை தற்போது அறிவிக்கப் போவதில்லை என்றும் குழந்தை வளரும்போது அவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தம்பதியின் குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலைப் பெற்றுத் தருவதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தம்பதிக்கு ஹார்மோன் சிகிச்சையினை தொடர்வதன் வாயிலாக ஜாஹத் குழந்தையின் தந்தையாகவும் ஜியா தாயாகவும் குழந்தையினை வளர்க்க உள்ளனர்.
இது குறித்து ஜியா பேசும்போது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள். என்னைக் காயப்படுத்தும் விதமாக வந்த பேச்சுகளுக்கு இது பதிலாக அமையும். ஆதரித்த அனைவருக்கும் நன்றி. ஒரு குழந்தை தன்னை அம்மா என அழைக்கப்போவது மிக மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.