விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.
அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.